Skip to content
Home » தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது…. எனக்கு என்ன குறை? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது…. எனக்கு என்ன குறை? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

திமுக ஆட்சி அமைந்ததும் ஜனவரி 12ம் தேதியை  அயலக தமிழர் தின விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் வெல்லும் என்னும்  தலைப்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடந்தது.   இதில்   218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்றன., 40க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அயலகத் தமிழர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தாய் மண்ணிற்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருக்கிறது; அயலகத் தமிழர் நல வாரியம் மூலமாக உங்களின் உடனடி தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் இணைய கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது; வெளிநாடுகளில் கைதான தமிழர்களுக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது; நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; தமிழ் அன்னையின் குழந்தைகள்; எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்; அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்; கீழடி, பொருநை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்; தமிழோடு இணைந்திருங்கள்; நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருங்கள். எனக்கு உடல் நலமில்லை என சிலர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது; தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பொங்கல் பரிசு , 1000 ரூபாய், மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய், வெள்ள நிவாரண நிதி  6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது அரசே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளது. எனவே  தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எனக்கு என்ன குறை?  வந்துவிடப்போகிறது.  மக்களின் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சிதான் எனக்கு உற்சாக மருந்து.நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன்; என் சக்தியை மீறி உழைக்கிறேன்.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருக்கிறது.அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!