சென்னை, கொளத்தூர் செந்தில் நகர் 100 அடி சாலையில் நடுரோட்டில் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் வரை செல்லக்கூடிய சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென கரும்புகை எழுந்து, தீப்பிடிக்கத் தொடங்கியது.
கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே தனியார் ஆம்னி பேருந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வந்ததை அடுத்து பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கி பேருந்தில் இருந்து எதனால் புகை வருகிறது என்று சோதிக்க முயன்ற போது பேருந்து திடீரென தீ பிடித்து முழுவதும் எறிந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவது தீயினால் சேதமடைந்தது.
இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாக பேருந்தின் ஓட்டுநர் உயிர் தப்பினர். அதேநேரத்தில் பேருந்தில் வேறு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்தால் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
