வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணம் ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு இதுவரை ரூ.26 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.4 கூடுதலாக உயர்த்தப்பட்டு ரூ.30 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கூலி வேலை, அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வேலூருக்கு சென்று வருகின்றனர். குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு நாள்தோறும் சுமார் 17 தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் குடியாத்தம் – வேலூர் இடையே பயணம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பயணி ஒருவர் கூறுகையில், “வேலூரில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். முன்பு பேருந்தில் ரூ.26 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.4 உயர்த்தி ரூ.30 வசூலிக்கின்றனர். தினசரி வேலை மற்றும் அலுவலகத் தேவைகளுக்காக பேருந்தை தொடர்ந்து பயன்படுத்தும் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண உயர்வு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பழையபடி ரூ.26 கட்டணத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா உள்ளிட்ட வழித்தடங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் சுமார் 210 தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக சங்கத்தின் சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அந்தந்த பேருந்து உரிமையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப ரூ.1 முதல் ரூ.4 வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், “பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். ஆனால், தற்போதைய கட்டண உயர்வு சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. அந்தந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், தினசரி பயணம் செய்யும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, கட்டண உயர்வை முறைப்படுத்தி, பழைய கட்டணத்தையே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
