அரியலூர்…
நள்ளிரவில் மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட காவலர்கள் மீது கொடூரத் தாக்குதல்…
ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு…
சோகத்தில் மூழ்கிய கிராமம்…
அரியலூரில் மாவட்டத்தில் பரபரப்பு…
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தளவாய் காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜா கண்ணு. அதேபோன்று தளவாய் காவல்நிலையல்தில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் (47).
இவர்கள் இருவரும் வழக்கம் போல கடந்த வெள்ளிக்கிழமை இரவு(30ம்தேதி) ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள தனியார் சிமெண்ட் ஆலை அருகே லாரி செட் ஒன்றின் முன்பாக மூன்று பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரவு 12 மணி ஆகப் போகிறது, இன்னும் இந்த இடத்தில் அமர்ந்து மது அருந்துவது தவறு எனக் கூறி ரோந்துக்கு சென்ற காவலர்கள் கண்டித்து விட்டு, உடனடியாக புறப்பட்டுச் செல்லுங்கள் என தனது ரோந்து பணியை தொடர்ந்துள்ளனர்.
அதிகாலை 2 மணி அளவில் காவலர்கள் மீண்டும் ரோந்து வந்த போது விநாயகர் கோயிலுக்கு அருகில் உள்ள மரப்பட்டறை சந்தில் அமர்ந்து மூன்று பேரும் மது அருந்துவதை தொடர்ந்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் விநாயகர் கோயில் அருகே மது அருந்துவதை தொடர்ந்ததால், வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்த காவலர் ராஜாக்கண்ணு மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் ஆகியோர், அவரவர் ஊருக்கு கிளம்பிச் செல்லுங்கள் என தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அருகில் சென்று எச்சரித்துள்ளனர்.
நாங்கள் இங்கு தான் அமர்வோம், மது அருந்துவோம். உன்னால் என்ன செய்ய முடியும் என காவலர்கள் இருவரையும் தரக்குறைவாக கூறியுள்ளனர். இதனால் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவலர் ராஜாகண்ணு, தளவாய் காவல் நிலையத்திற்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே, காவலர்கள் மீது மூன்று நபர்களும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த துவங்கியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன், காவலர்கள் மீது கை வைக்கிறாயா எனக் கூறி தாக்குதலில் ஈடுபட்டுபவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். இதனால் மேலும் மாத்திரம் அடைந்த போதை கும்பல், காவலர் ராஜா கண்ணுவின் இரு கைகளையும் முறுக்கிப்பிடித்தவுடன், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக வெங்கடேசனின் முகத்தை குறி வைத்தே கைகளாலேயே ஓங்கி குத்தியபடியே இருந்துள்ளனர். இதனால் நிலைகுலைந்த வெங்கடேசன் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அதற்குள் சக காவலர்கள் விரைந்து வந்த நிலையில் மூவரில் ஒருவர் தப்பி ஓடியதாக தெரிகிறது. காயம் அடைந்த வெங்கடேசன் மற்றும் ராஜா கண்ணு ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போதை ஆசாமிகள் இருவரை பிடித்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிலப்பனுர் கிராமத்தை சேர்ந்த மதிவாணன், தாமரைக்கண்ணன், பரிதி ஆகிய மூவரும் மது அருந்தியதும், காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது. மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களையும் தளவாய் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன், ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை உடனடியாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசனின் தலைப்பகுதியில் கடுமையாக தாக்குதல் நடந்துள்ளதால் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகன மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வெங்கடேசன் உயிரிழந்தார்.
இதனால்வெங்கடேசனின் தாயார் மற்றும் இரு பிள்ளைகளும் கதறி அழுத காட்சிகள் காண்பவர்கள் நெஞ்சை கலங்க செய்தது.
ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மீது மது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தியதில், ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
