Skip to content
Home » காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் உவரி அருகே உள்ள கரைசுத்திபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மாயமானார். 2 நாள் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே  2ம் தேதி ஜெயக்குமாரின் மகன் உவரி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் 4ம் தேதி காலை  ஜெயக்குமாரின் சடலம் அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.  உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பி்ரெண்டு  சிலம்பரசன் மற்றும்  தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  ஜெயக்குமார் கை, கால்களை கட்டிப்போட்டு எரித்து கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில்  ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்களையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி இருந்தார். தன் வீட்டின் அருகில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும்,அத்துடன் தனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் தான் பொறுப்பு என   முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தற்போதைய நாங்குனேரி காங்கிரஸ்  எம்.எல்.ஏ.  ரூபி மனோகரன்,  மற்றும் பல தொழிலதிபர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

ஒரு பெண் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில்  போஸ்ட் மார்டம் அறிக்கை போலீசாருக்கு நேற்று கிடைத்தது. அதில் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை என்று கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே ஜெயக்குமார் கொலை  தான் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி ஆகி உள்ளது.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை ஆய்வு செய்த உயர் போலீஸ் அதிகாரிகள்,  கொலையாளிகள் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம்.  அவர்கள் கொலை செய்வதையே தொழிலாக செய்யும் கூலிப்படையினராக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  இதுபற்றி இன் னொரு போலீஸ் அதிகாரி கூறும்போது, திருச்சியில் ராமஜெயம் கொலை போல இந்த கொலையும் நடந்துள்ளது.

இரு  சம்பவங்களிலும்  முக்கிய பிரமுகர்களை கடத்தி  கொலை செய்து உள்ளனர். ராமஜெயம் உடலையும் எரிக்க முயன்றபோது கொலையாளிகள் சூழ்நிலை சரியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு போய்விட்டனர் என்று கூறப்பட்டது. ஆனால் இங்கு  எரிக்கப்பட்டு விட்டது. மற்றபடி இரு கொலைகளும் ஒரே மாதிரியாக திட்டமிடப்பட்டு நடத்தி் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில்  ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய நபர்கள் உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று தங்கபாலு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  அவர் இன்று எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.  ஏற்கனவே  தனுஷ்கோடி  ஆதித்தனிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதுபோல ஜெயக்குமாரின் உறவினரான ஒரு டாக்டரிடமும் போலீசார் விசாரித்துள்ளனர்.  இன்னும் 2 நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அப்போது பல முக்கிய புள்ளிகள் இதில் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!