காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ‘பாரத் நியாய யாத்ரா’ பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேதி வரை “பாரத் ஜோடோ யாத்ரா” மேற்கொண்ட ராகுல், தற்போது இந்த புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்குவதற்காக “பாரத் நியாய யாத்ரா” நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் துவங்கிய “பாரத் ஜோடோ யாத்திரை” காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ராகுல் பயணம் செய்தார்.
அதே நேரத்தில், “பாரத் நியாய யாத்திரை” வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து தொடங்கி, மேற்கில் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் முடிவடையும். இதன் மூலம் பாரத நியாய யாத்திரையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ராகுல் பயணிக்க உள்ளார். “பாரத நியாய யாத்திரையில்” உள்ள 6200 கி.மீட்டர் பயணத்தின் பெரும்பகுதி பேருந்தில் செல்வார் எனவும், ஆனால் சில இடங்களில் கால்நடை பயணமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி முன்னெடுத்த “பாரத் ஜோடோ யாத்திரை” காங்கிரஸ் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் “பாரத நியாய யாத்திரை” மிகவும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் பாரத் நியாயா யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இதன் மூலம் இந்த பயணம் மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் முடிவடைகிறது. “பாரத் நியாய யாத்திரை” 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்கள் வழியாக செல்லும். மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வழியாக பாரத நியாய யாத்திரை செல்கிறது.
ராகுல் காந்தி “பாரத் ஜோடோ யாத்திரை” செப்டம்பர் 2022 இல் தொடங்கினார், அது ஜனவரி 2023 இல் முடிவடைந்தது. செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தியின் பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தின் மூலம் அவர் 4500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடந்தார். இந்தப் பயணத்தின் நோக்கம் இந்தியாவை ஒருங்கிணைத்து நாட்டைப் பலப்படுத்துவதாகும். இந்த வருகையால் காங்கிரஸின் அமைப்பு வலுப்பெற்றது. பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 30, 2023 அன்று காஷ்மீரில் முடிவடைந்தது.
“பாரத் ஜோடோ யாத்ரா” மூலம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 75 மாவட்டங்கள் சென்றன. இந்த யாத்திரை சென்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். பாரத் ஜோடோ யாத்ராவில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.