காமராஜரால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்த்துறையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது அசிங்கம், கேவலம் – திருச்சி விமான நிலையத்தில் எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி.
காங்கிரஸ் ராஜ்ய சபா எம்பி கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-
தொழிலதிபர் வீரமணி போக்சோ கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துள்ளது குறித்த கேள்விக்கு:- பெரிய பொறுப்புகளில் இருக்கும் அரசியல்வாதிகளைப் பலரும் சந்திப்பார்கள் என்பதாலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாலும் மட்டும் அவர்களைத் தொடர்படுத்தி முடிவு செய்யக்கூடாது. விசாரணை தரமாகவும், விரைவாகவும், முழுமையாக நடைபெற வேண்டும். இல்லையென்றால் அரசியல் கண்ணோட்டத்துடன் பல கதைகள் உருவாக்கப்படும்.
மூன்றாவது அணி அமைப்பதற்காக மம்தா பானர்ஜியை, திமுக கனிமொழி எம்பி சந்தித்து பேசி உள்ளது குறித்து கேள்விக்கு:-
எஃப்சிஆர்ஏ, டீ-லிமிடேஷன் போன்ற மசோதாக்களைப் பின்வாசல் வழியாக நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. காங்கிரசுடன் திமுக நேரடித் தொடர்பில் இல்லாததால், பாஜகவின் திட்டங்களை முறியடிக்க மம்தா பானர்ஜியைக் கனிமொழி எம்பி சந்தித்து மாற்று வழி குறித்துப் பேசியிருக்கலாம். மூன்றாவது அணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய பிறகு அது குறித்துப் பேசலாம் என்றார்.
இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு:-
கடந்த தேர்தலில் கணிப்புகள் மாறியது போல இந்த இடைத்தேர்தலிலும் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. அதிமுக பிரச்சாரத்தை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 120 நாட்கள் ஆன நிலையில், அரசின் ரேட்டிங் கூடியுள்ளது. புதிதாக வந்துள்ள அமைச்சர்கள் நேர்மையாக செயல்படுவதால் இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு அட்வான்டேஜ் இருக்கும் என தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் மீதான ஊழல் வழக்கு குறித்த கேள்விக்கு:- காமராஜரால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்த்துறையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது கேவலமானது. இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்காமல் விரைவாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அன்பில் மகேஷ் மற்றும் இரண்டு மூன்று அமைச்சர்கள் மீதான வழக்குகளை, பாஜக அரசின் அமலாக்கத்துறை போல மிரட்டலுக்காக இழுத்தடிக்காமல், முறையாக, விரைவாக விசாரிக்க வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக டிக்கெட் விற்பனை குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:- அவர் ஏற்கனவே பல பட்டியலை எடுத்துக் கொண்டு வந்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில் என்ன கண்டுபிடித்தார் என தெரியவில்லை. இதுவும் அதுபோலத்தான்.
மிசா குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவசியம் இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து கேள்விக்கு;-
ஜென்சி இளைஞர்களுக்கு மிசா குறித்து வரலாற்று ரீதியாக எடுத்துரைப்பது நல்லது. இல்லையென்றால் சமூக வலைத்தளங்களில் வருவதை மக்கள் நம்ப ஆரம்பத்தில் விடுவார்கள். உண்மை என்ன என்பதை வரலாற்று ரீதியாக ஒரு முக்கிய தலைவர் எடுத்து பேசுவது அரசியல் களத்திற்கு நல்லது.
அஜித் ரசிகர்கள் கட்சியை தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு:- சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் முயற்சிப்பார்கள். தனுஷ் கட்சி ஆரம்பிப்பதாக கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
ரீல்ஸ் ஆட்சி நடப்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:-
முதலில் சினிமா ஆட்சி, பிறகு டிவி ஆட்சி, சீரியல் ஆட்சி, தற்போது ரீல்ஸ் ஆட்சி டிரண்டில் உள்ளது. இளைய சமுதாயத்தினர் ரீல்ஸ் மூலம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வது உண்மைதான் என்றாலும், திமுக மீதான பெரிய அதிருப்தியே தவெகவின் எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும். அதனை ஏற்றுக்கொள்ளாமல் ரீல்ஸ் வீடியோக்கள் மீது பழி போடுவது வருந்தத்தக்கது என தெரிவித்தார்.
