செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்தவர் பத்மாவதி, 55. இவர், 2023 மே, 25ம் தேதி, இரவு, 8.30 மணியளவில், மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது, எதிர் திசையில் அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக வந்த, ‘யூ டியூபர்’ இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பத்மாவதி இறந்தார்.
அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எ.பி. நஷீர் அலி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பீட்டு நிறுவனம் சார்பில், ‘பத்மாவதி கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றதால், விபத்து ஏற்பட்டது. மேலும், விபத்தின் போது காரை ஓட்டியவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை. எனவே, இழப்பீடு வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கைப்படி, கார் ஓட்டுனரின் கவனக்குறைவு தான் விபத்திற்கு காரணம் என்பது உறுதி செய்யப்படுகிறது.
மேலும், பத்மாவதி கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல, விபத்தின் போது ஓட்டுனரிடம் உரிமம் இல்லாததால் மட்டும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செலுத்துவதில் இருந்து விலக முடியாது. அதன்படி, காப்பீட்டு நிறுவனம் முதலில் இழப்பீடை வழங்கி விட்டு, பின் அதை கார் உரிமையாளரான இர்பானிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். விபத்தில் உயிரிழந்தவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார். அதன்படி, எதிர்கால வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, 30.69 லட்சம் ரூபாய் இழப்பீடை, ‘இண்டஸ் இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனம், 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
