தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, தட்டுமால் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் இன்று மாலை தனது மனைவியுடன் மாடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள மயான கரை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு உயர் மின் அழுத்த கம்பி ஒன்று அறுந்து 10 நாட்களாக தரையில் கிடந்துள்ளது. இது குறித்து கொத்தங்குடி ஊராட்சி நிர்வாகத்திடமும், மின்சார வாரியத்திடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு, அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. அருகில் இருந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி லலிதா (55)ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அறுந்து கிடக்கும் மின் கம்பியை உடனடியாக சீரமைக்காத மின்சார வாரியத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயிரிழந்த மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உடனடியாக மின் கம்பியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
