Skip to content
Home » பைனலுக்கு செல்லுமா சிஎஸ்கே ? .. சேப்பாக்கத்தில் இன்று பரபரப்பான ஆட்டம்…

பைனலுக்கு செல்லுமா சிஎஸ்கே ? .. சேப்பாக்கத்தில் இன்று பரபரப்பான ஆட்டம்…

ஐபிஎல் தொடரின் 16வது சீசன், கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கி திறமையை வெளிப்படுத்தின. ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்த நிலையில், முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத் (20 புள்ளி), சென்னை (17), லக்னோ (17), மும்பை (16) அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த சுற்றின் குவாலிபயர்-1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கிலும், குவாலிபயர்-2 மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த குஜராத் ஜயன்ட்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதும் குவாலிபயர்-1 ஆட்டம் சென்னையில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மே 28ம் தேதி நடைபெற உள்ள பைனலுக்கு நேரடியாக முன்னேறும். தோற்கும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பாக… புள்ளிப் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த லக்னோ – மும்பை அணிகள் மோதும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன், குவாலிபயர்-2 ஆட்டத்தில் அந்த அணி மோத வேண்டும் (மே 26, அகமதாபாத்).

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் அணி, 14 லீக் ஆட்டத்தில் 10 வெற்றிகளைக் குவித்து 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சிஎஸ்கே அணியுடன் அகமதாபாத்தில் மார்ச் 31ல் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத், தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியுடன் மோதிய 3 ஆட்டங்களிலுமே குஜராத் அணிதான் வெற்றியை சுவைத்துள்ளது. இந்த நிலையில், இன்று நடக்கும் குவாலிபயர்-1 ஆட்டத்தில் குஜராத் அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது. தொடக்க வீரர் கில் அருமையான பார்மில் உள்ளார்.

தொடர்ச்சியாக 2 சதம் விளாசிய உற்சாகத்துடன் உள்ள அவரை கட்டுப்படுத்துவது சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். சாஹா, ஹர்திக், சாய் சுதர்சன், விஜய் ஷங்கர், திவாதியா, ரஷித் ஆகியோரது அதிரடியும் குஜராத் ரன் குவிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஷமி, தயாள், ரஷித், நூர், மோகித் பந்துவீச்சு கூட்டணியும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயம், தோனி தலைமையிலான சென்னை அணி முந்தைய தோல்விகளை மறந்து குஜராத் அணிக்கு தக்க பதிலடி கொடுப்பதுடன் நேரடியாக பைனலுக்கு முன்னேறும் உறுதியுடன் உள்ளது. இந்த போட்டியில் வென்றால் நான்கு முறை சாம்பியனான சிஎஸ்கே5வது முறையாக பைனலுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க வீரர்கள் ருதுராஜ், கான்வே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் சென்னை அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். துபே, ரகானே, மொயீன், ஜடேஜா, தோனி என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பதால் ரன் குவிப்பை பொறுத்தவரை சென்னை அணிக்கு பெரிய அளவில் எந்த நெருக்கடியும் இல்லை. தீபக், தேஷ்பாண்டே, பதிரணா, தீக்‌ஷனா, ஜடேஜா ஆகியோரடங்கிய பந்துவீச்சு கூட்டணியும் அசத்தி வருகிறது. ஆனாலும், சூப்பர் ஃபார்மில் உள்ள நடப்பு சாம்பியனை வீழ்த்த வேண்டும் என்றால் தோனி அன் கோ ஒருங்கிணைந்து செயல்பட்டால் , குறிப்பாக பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். இரு அணிகளுமே வெற்றியை வசப்படுத்தி நேரடியாக பைனலுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!