Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் பாஷர் அல்-அசாத்துக்குத் டமாஸ்கஸ் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 டிசம்பரில் கிளர்ச்சியாளர்களின் தீவிரத் தாக்குதலால் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அசாத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற நிலையில், அவர் இல்லாத நிலையிலேயே (in absentia) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிரியா இடைக்கால அரசின் கீழ் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில், பாஷர் அல்-அசாத் மற்றும் அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது திட்டமிடப்பட்ட கொலைகள், சிறுவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள், சட்டவிரோதக் கைதுகள் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான போர்க் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதனையடுத்தே, நாட்டின் உயரிய தண்டனையான மரண தண்டனையை நீதிமன்றம் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

அசாத்துடன் சேர்த்து, 2011-ல் தாரா (Daraa) மாகாணத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கக் கொடூரமான சித்திரவதைகளை மேற்கொண்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆதேஃப் நஜீப் (Atef Najib) என்பவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட நஜீப், சிறை உடையில் கூண்டிற்குள் நிறுத்தப்பட்டிருக்க, நீதிபதி அவருக்குத் தண்டனையை வாசித்துக் காட்டினார். அசாத்தின் 24 ஆண்டு கால இரும்புக்கர ஆட்சியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரிய மக்களுக்கு இத்தீர்ப்பு ஒரு முக்கியச் சட்டப்பூர்வ நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ள பாஷர் அல்-அசாத்தை சிரியாவிற்கு நாடு கடத்தி தண்டனையை நிறைவேற்ற இடைக்கால அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சிரியா வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவருக்குப் போர்க் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால், சர்வதேச அளவில் இது பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!