சேலம் அருகே உள்ள அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (32). அவருடைய வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் குமரேசன் வீட்டில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்து 20 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட 5 நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் ஓமலூர் செல்லபிள்ளை குட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அய்யம் பெருமாம்பட்டியை சேர்ந்த குமரேசன், செல்வம் (45), பெருமாம்பட்டியை சேர்ந்த சிவானந்தம் (22), அத்திகுட்டையை சேர்ந்த சந்துரு (31), பழையூரை சேர்ந்த சிவா (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்றது தெரிந்தது. இதையடுத்து கைதானவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, 2 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
