மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் அர்ஜுன் புகார்!*
தனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகர் அர்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தைத் தொடர்ந்து, மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்ததாக அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
மகளின் தனியுரிமையை மதித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது தனது மகளையும், அவரது குழந்தையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எந்தவித ஆதாரமும் இன்றி தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்துவது உள்ளிட்ட அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்படுவதாகவும், இதுபோன்ற செயல்கள் ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதற்காக யார் வேண்டுமானாலும் ஆதாரமற்ற கதைகளைப் புனைந்து பரப்புவதற்கு உரிமை கிடையாது என்றும், தங்களது அமைதியை தவறுகளை ஏற்றுக்கொள்வதாகக் கருதக்கூடாது என்றும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவதூறு கருத்துகளைப் பரப்பும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையிடம் முறையாகப் புகார் அளித்துள்ளதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
