தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் உணவுப் பொருள் தாயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் வணிக கட்டிடங்களை மறுமதிப்பீடு செய்து புதிய மற்றும் கூடுதல் சொத்து வரிவிதிக்கும் நோக்கத்தோடு அளவெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஓராண்டிற்கு முன்பாக இதே போன்று அளவீட்டு பணிகள் நடைபெற்று புதிதாகவும், கூடுதலாகவும் சொத்து வரி விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இவ் அளவீட்டு பணி நடைபெற துவங்கியிருப்பது தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூலப்பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, பணியாளர் பற்றாக்குறை, அவ்வப்போது ஏற்படும் மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் வணிக நிறுவனங்கள் மிகவும் நலிவடைந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் ஓராண்டு இடைவெளியில் இரண்டாவது முறையாக அளவீட்டு பணி துவங்கியிருப்பதன் காரணமாக மீண்டும் வரி உயர்வு குறித்த அச்சம் வணிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
எங்களது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வரும் துறை சார்ந்த அமைச்சருமான ஜோசப் விஜய்யை மேற்கண்ட அளவீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக விரைவில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். வணிகர் சமுதாயத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்கள் எங்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உரிய தீர்வினை வழங்குவார் என உறுதியாக நம்புகிறோம்.
மேலும் திருச்சியை போன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மறுமதிப்பீடு மற்றும் வரி உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைப் போன்று வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட அளவீட்டு பணியினை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று இவ்வாறு அந்த அறிக்கையில் கோவிந்தராஜீலு கூறியுள்ளார்.
