திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள கிராம மக்கள் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக, ஆங்காங்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. எனினும், திருத்தணி அருகே பொன்பாடி சுற்றுவட்டார கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, தங்களின் விவசாய நிலங்கள், இடுகாடு மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல சுமார் 2 கிமீ தூரம் சுற்றிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வலியுறுத்தி, இன்று காலை பொன்பாடி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை மறித்தபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் மனித உருவப்பொம்மையை பாடையில் வைத்து, நூதன முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபால், திருத்தணி ஏஎஸ்பி ஷுபம் திமான், இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்துறை அதிகாரிகளிடம், பொன்பாடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைத்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே எங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, இப்பிரச்னை குறித்து உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, பொன்பாடி பகுதியில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று வருவாய்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால், திருத்தணி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 5 கிமீ தூரத்துக்கு ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.
