தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, வீடுகளின் முன்பாகவும் தெருக்களிலும் விளையாடும் சிறு குழந்தைகள் தெருநாய்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. தெருநாய்களைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது.
திருவள்ளூர் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் 4 வயது சிறுவன் நிஷாந்த், தனது வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சிறுவன் நிஷாந்தை நோக்கிப் பாய்ந்து கடித்துக் குதறியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக நாயை விரட்டிச் சிறுவனை மீட்டனர். நாய்க்கடியில் பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் நிஷாந்த், உடனடியாகச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
