நேபாள வெள்ளத்தில் சிக்கியவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த துரை வைகோ எம்பி – அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாக ஆறுதல்.
கும்பகோணம் மற்றும் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் டிராவல் ஏஜென்சி மூலம் தமிழகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இவர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக, திருச்சியைச் சேர்ந்த சிவரஞ்சினி, வள்ளிநாயகி, கற்பகம் உள்ளிட்ட 3 பெண்கள் உள்பட 21 பேர் நேற்று இரவு டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, குரோம்பேட்டை தனியார் ஏஜென்சி மூலம் சுற்றுலா சென்ற திருச்சி ஸ்ரீரங்கம் சரஸ்வதி கார்டன் பகுதியைச் சேர்ந்த விமலா ரவி மற்றும் காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுந்தராம்பாள் ஆகிய இரு பெண்களின் நிலை குறித்தும் தற்போது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
காணாமல் போன விமலா ரவியின் வீட்டிற்கு இன்று நேரில் சென்ற திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விரைவில் விமலா குறித்த தகவல்களைச் சேகரிக்க தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், குடும்பத்தினரிடம் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்பி துரை வைகோ கூறியதாவது:-
குரோம்பேட்டை டிராவல்ஸ் மூலம் நேபாளம் சுற்றுலா சென்ற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த விமலா மற்றும் காட்டூரைச் சேர்ந்த சுந்தராம்பாள் ஆகிய இருவரின் நிலை குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் தெரியவில்லை. விபத்து நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் உறவினர்களிடம் பேசியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதுவரை அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்திய அரசும், தமிழக அரசும் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகின்றன. இந்த விபத்து தொடர்பாக நேபாள அரசு இந்தியாவிற்கு நேற்றுதான் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நேபாள அரசு தாமதிக்காமல் அனுமதி அளித்திருந்தால், மீட்புப் பணிகள் இன்னும் விரைவாக நடந்து முடிந்திருக்கும். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.
