Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்… 3வது நீதிபதி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்… 3வது நீதிபதி உத்தரவு

  • by Senthil

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் “சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் புலன் விசாரணை செய்வது கடமை.

எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை.

கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோர முடியும். மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது. பொதுவாக அனைவரது இதயத்திலுமே 40 சதவீத அடைப்பு இருக்கும் என துஷார் மேத்தா  தனது வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ( இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் காணொலி வாயிலாக வாதாடினார்.  அப்போது அவர் கூறியதாவது:

கைதுக்கு பின்னர் வாக்குமூலம் பெற முடியாது.   பி.எம்.எல்.ஏ. சட்டப்படிஅமலாக்கத்துறை அதிகாரிகள்  காவல்துறை அதிகாரிகள் அல்ல.   ஆதாரங்களை சேகரித்த பின்னரே  புகார் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் கைது செய்ய முடியாது என துஷார் மேத்தா   ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு உள்ளார். ஆனால் இங்கு முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறுகிறார்.

இவ்வாறு வாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது எனக்கு  வாயில் லேசான வலி ஏற்படுகிறது( I have little pain) என்று கபில்சிபல் கூறினார்.

நீதிபதி  கார்த்திகேயன்:  இது பள்ளிக்கூடமோ, கல்லூரியோ அல்ல, சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 12. 15 மணிக்கு மீண்டும் விவாதிக்கலாம்.விவாதத்தின்போது நீங்கள்  உங்கள் வசதியை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார்.

அதைத்தொடர்ந்து வாதம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.  ஆனாலும் நீதிபதி அங்கேயே இருந்தார். பின்னர் 12. 15 மணிக்கு பிறகு  வாதம் தொடர்ந்தது.   அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  சுந்தரேசன் வாதிட்டார்.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரும், தனக்கு இருதய பிரச்னை இருப்பதாக கூறி விசாரணைக்கு ஆஜராக 4 வார காலம் அவகாசம் கேட்டு உள்ளார் என்றார்.

மதியம் 1.50 மணி அளவில் வாதம் நிறைவடைந்தது.  அதைத்தொடர்ந்து  பிற்பகல் 2.30 மணி அளவில் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பை வாசிக்கத்தொடங்கினார்.  தீர்ப்பில் அவர் கூறியதாவது:

அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால் காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.  எனவே  அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.  நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவு தான் எனது உத்தரவும்.  செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்.  தான் குற்றம் செய்யவில்லை என அவர் விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.  8 நாட்கள் காவல் வழங்கியும், அமலாக்கத்துறை 1 நாள் கூட விசாரிக்க முயற்சிக்கவில்லை.  சட்டப்படி முதல் 15 நாள் தான் கஸ்டடி எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை விசாரணைக்கு  செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும்.  செந்தில் பாலாஜி உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை கூறி உள்ளது. அமலாக்கத்துறை விசாரணையை தடுக்க முடியாது.

செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கு தெரியும். எனவே கைது பற்றி தனக்கு தெரிவிக்கப்படவில்லை என அவர் கூற முடியாது.  கைது, நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது.  நீதிமன்ற காவலுக்கு பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது. மருத்துவ மனையில் இருந்த காலத்தை  நீதிமன்ற காவலாக கருதமுடியாது.    நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பினை நான் ஏற்கிறேன்.  ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.  எனது தீர்ப்பை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்ற காவலில் வைத்த பிறகு தான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் , அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை எதிர்த்து செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்யவில்லை.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் எப்போது  தொடங்கும் என்பதை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்யும்.

இவ்வாறு 3வது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பில் கூறி உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!