Skip to content
Home » ஜெயலலிதா பாணியில் தேர்தல் கூட்டணி…. பாஜகவுக்கு எடப்பாடி சூடான பதில்

ஜெயலலிதா பாணியில் தேர்தல் கூட்டணி…. பாஜகவுக்கு எடப்பாடி சூடான பதில்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு ,உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் கூட்டணி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக மாநாடு இலச்சினையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக 3 ஆக, 4 ஆக உடைந்து விட்டதாக கூறினார்கள். தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சி அதிமுக தான். இனி ஊடகங்கள் அதிமுக உடைந்து விட்டது என கூற வேண்டாம். இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. சிலர் அதிமுகவை முடக்கவேண்டும் என செயல்பட்டார்கள். எங்கள் மாவட்ட செயலாளர்கள் அற்புதமாக செயல்பட்டு அதிமுக உடையவில்லை,. கட்டுக்கோப்போடு உள்ளதாக நிரூபித்து விட்டனர். அதிக உறுப்பினர்கள் சேர்த்து விட்டனர். பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு அரசியல் செய்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுகிறது- காவிரி பிரச்சினைக்காக அதிமுக உறுப்பினர்கள் போராடி,நாடாளுமன்ற அவை 22 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது.
இப்போது திமுகவும், காங்கிரசும் கூட்டணியாக உள்ளது. இந்தியா முழுவதும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் திமுக ஏன், கர்நாடக முதல்வருடன் பேசி தண்ணீர் பெறவில்லை. கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் வேண்டுமென்றே திட்டமிட்டு, அமைதியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இதை தமிழக முதல்வர் கண்டுகொள்ளவில்லை.
அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தோம். பல விருதுகளை பெற்றுள்ளோம். இன்றைக்கு மருத்துவத்துறை 4வது இடத்துக்கு சென்று விட்டது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி தான் கொடுக்கிறார். நிர்வாகத்திறன் இல்லை. ஒரு குழந்தைக்கு கை அகற்றப்பட்டு உள்ளது. அந்த வலி அதை பெற்றெ
டுத்த தாய்க்கு தான் தெரியும். உரிய சிகிச்சை அளித்திருந்தால் இது நடந்திருக்காது. இரண்டு கை இல்லாத ஒருவருக்கு அதிமுக ஆட்சியில் இரண்டு கைகளும் பொருத்தப்பட்டது. கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டது அதிமுக. தக்காளி மட்டும் தான் விலை உயர்வு என கேட்கிறீர்கள். எல்லா மளிகை பொருட்களும், 70% உயர்ந்து விட்டது. சின்னவெங்காயம், பருப்பு, விலைகளும் உயர்ந்து விட்டது.
உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் சொல்கிறார்கள். இன்னும் பருவமழை பெய்யவில்லை. ஏற்கனவே நடவு செய்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. கர்நாடக அரசு எங்களிடம் தண்ணீர் இல்லை என்கிறார்கள். உரிய நேரத்தில், ஜூன் 12ல் தண்ணீர் திறந்தீர்கள். முறையாக தண்ணீர் கொடுங்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர்கள் தான்(திமுக) செய்வது போல மாமன்னன் படத்தில் காட்டுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அண்ணன் தனபால் அவர்கள் சபாநாயகராக இருந்தபோது, அவரை கீழே தள்ளி, மேஜையை உடைத்தார்கள். அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது வரும்போது கூட்டணி பற்றி இறுதி செய்து உங்களிடம் சொல்வோம். பாஜக கூட்டணி பற்றி ஏற்கனவே சொல்வி விட்டோம். எங்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை எங்களிடம் கேளுங்கள். அவா்களிடம் கேட்க வேண்டிய கேள்வி பற்றி அவர்களிடம் கேளுங்கள். அதிமுக பெரிய இயக்கம். அம்மா எப்படி கூட்டணி அமைத்தார்களோ அதுபோல கூட்டணி அமைப்போம். பாஜக உறவு பற்றி நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் மக்களவை தேர்தலில் 25 இடங்களில் போட்டியிடுவோம், 10 இடங்களுக்கு குறையாமல் போட்டியிடுவோம் என பாஜக தலைவர்கள் கூறி வந்த நிலையில், இன்று பாஜக தலைவர்களின் பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பேட்டி அளித்து உள்ளார். இந்த பேட்டி பாஜக தலைமைக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்ததாக அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!