Skip to content
Home » அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்க கோரி மனு.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..

அதிமுகவில் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் பிரிந்த பிறகு, கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்பதால், கட்சியின் பொதுச் செயலாளராக சமீபத்தில் அவர் பொறுப்பேற்றார். இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவி உட்பட ஜூலை11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, கர்நாடக தேர்தலில் போட்டியிட, அதிமுகவில் பழனிசாமி தரப்பு முடிவெடுத்தது. ஓபிஎஸ் தரப்பினரும் போட்டியிடப் போவதாக அறிவிக்க, இரட்டை இலை சின்னம் தொடர்பான சிக்கல் உருவானது. எனவே, தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குரு சந்திரா விசாரித்தார். அப்போது இந்த பிரச்சினையில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுச் செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டனர். முடிவில், பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தலாம் என்றிருந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், அதிமுகபொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில், பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தேர்தல்ஆணையம் இன்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவை அறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!