சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) என்பவரை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி வசந்தா (40) பிரிந்து சென்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது 11 வயது மகன் தாமோதரனுடன் வசித்து வந்தான். கடந்த ஓராண்டுக்கு முன்பு மகனைத் தன்னுடன் அனுப்புமாறு வசந்தா கேட்டதற்குத் தாமோதரன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பொன்மணி என்ற ரவுடியிடம் ரூ.4 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.3.5 லட்சம் கொடுத்துக் கணவரின் காலை உடைக்கக் கூலிப்படையை ஏவியுள்ளார். அதன்படி, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி பார்சல் கொடுப்பது போல் நாடகமாடி தாமோதரனை வீட்டை விட்டு வெளியே வரவழைத்த கூலிப்படையினர், அவரை இரும்பு மட்டையால் தாக்கி வலது காலை உடைத்துவிட்டுத் தப்பினர். இச்சம்பவம் குறித்து விசாரித்த பீர்க்கன்காரணை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பரத் (19), அகஸ்டின் (19) மற்றும் ரவுடி பொன்மணி (32), மனைவி வசந்தா ஆகியோரைக் கைது செய்தனர். இத்தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
