Skip to content
Home » ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கி தவித்த கா்ப்பிணி…ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

  • by Senthil

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.  அந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரெயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியால் நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் 4 பஸ்கள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து கனமழை பெய்த வண்ணம் இருந்ததாலும், ரெயில் நிலையத்தை தண்ணீர் கடுமையாக சூழ்ந்ததாலும் எஞ்சிய 500 பயணிகளை மீட்க முடியாத நிலை உருவானது. பள்ளியில் தங்கவைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ரெயிலில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு வழங்கமுடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கிடையே ரெயிலில் சிக்கி உள்ள பயணிகைளை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.  இன்று மீட்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அவர்கள்  தென்னக  ரயில்வே வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், ‘தொடர்மழை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிப்பு காரணமாக பயணிகளை வெளியேற்றுவதில் சிக்கல்கள் நீடித்தன. எனவே அவர்கள் ரெயில் பெட்டிகளிலும், ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக போதிய மின் விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை ரெயில் நிலையத்தில் போதுமான அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிகளை மீட்பது சிரமம் என்பதால் இன்று பயணிகள் அனைவரும் மீட்கப்படுவார்கள். அதன்பின்னர் அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ரெயில்வேயின் என்ஜினீயரிங் பிரிவு மற்றும் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து சீரமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!