Skip to content
Home » பேஸ்புக் பதிவு… சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு…

பேஸ்புக் பதிவு… சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு…

  • by Senthil

கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (79) உடல்நல குறைவால் கடந்த 18ம் தேதி காலமானார். கடந்த சில மாதங்களாக உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார்.  காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி சுமார் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 4 முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவராக, இரண்டு முறை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது மறைவை அடுத்து, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளிக்கு அலங்கார வாகனத்தில் உம்மன் சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டடு, அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் உம்மன் சாண்டியின் உடலுக்கு பிரியா விடை கொடுத்தனர். இந்த இறுதி சடங்கில் ராகுல் காந்தி நேரில் பங்கேற்றார். உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒருநாள் பொதுவிடுமுறை அளித்து, இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள மாநில அரசு அறிவித்தது.

இந்த நிலையில், மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விநாயகன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் விநாயகன், உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உம்மன் சாண்டி யார்? எதுக்கு 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படணும், ஊடகங்கள் அவரது இறுதி ஊர்வலத்துக்கு முக்கியத்தும் கொடுக்குது ஏன்?, அவர் நல்லவருனு நீங்க நினைச்சா நான் என்ன பண்ண முடியும் என தெரிவித்து, நடிகர் விநாயகன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன் மீது காவல்துறையில் காங்கிரஸ் நிர்வாகி புகாரளித்துள்ளார். கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியை அவமதித்ததற்காக நடிகர் விநாயகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விநாயகன் வீடியோ பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததால் அவர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி விட்டார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!