Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்

பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்

ஊட்டி நகரத்தை தூய்மையானதாக மாற்ற பொதுமக்கள் குப்பைகளை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை வீசி எறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. குப்பைகளை மூலத்திலேயே 4 வகையாகப் பிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ஈரக் கழிவுகளான சமையலறை கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், உலர் கழிவுகளான பிளாஸ்டிக், காகிதம், உலோகம், கண்ணாடி, சுகாதாரக் கழிவுகளான டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள், சிறப்பு பராமரிப்புக் கழிவுகளான பியூஸ் போன பல்புகள்,டியூப் லைட்டுகள்,பேட்டரிகள், காலாவதியான மருந்துகள் போன்றவைகள் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

குப்பைகள் சேகரிக்கப்படுவது முதல் முறையாக அழிக்கப்படுவது வரை, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும். இந்த புதிய விதிகளின் அடிப்படையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றன.

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 தொடர்பான கூட்டம் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையில் நடந்தது. இதில் நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், சுகாதார ஆய்வாளர்கள் மால்முருகன், வைரம், துப்பரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி கூறியதாவது, ஊட்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ஐ சிறப்பாக செயல்படுத்தும் வகையில், குப்பைகளை 4 வகைகளாக பிரித்து சேகரிக்கும் புதிய நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விதிகளின் படி வீடுகள் மற்றும் வணிகப் பகுதிகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,தொழிற்சாலைகள்,சந்தை பகுதிகள்,தெருவோர வியாபாரிகள் என அனைவரும் நகராட்சியின் குப்பை வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார குப்பை, சிறப்பு பராமரிப்பு குப்பை (அபாயகரமான குப்பை) குப்பைகளை நான்கு வகையாக தரம் பிடித்து நகராட்சி குப்பை வாகனங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும்.

பிரித்துக் கொடுக்காத வீடுகள் மற்றும் வணிகப் பகுதிகளிலிருந்து குப்பைகள் பெறப்பட மாட்டாது. இந்த விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் நகராட்சி மூலமாக விதிக்கப்படும்.அதேபோல் கழிவு நீர் கால்வாய்கள், பொது இடங்கள், தெருக்கள், அனைத்து மத வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதிகள் ஆறுகள்,நீர்நிலை பகுதிகள் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது.

பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாய கழிப்பிடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் வீடுகளில் நகராட்சிக்கு சம்பந்தப்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகையாக சரியாக தரம் பிரித்துக் கொடுத்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதோடு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.

மேலும் குப்பைகளை 4 வகைகளாக பிரித்து தருவதை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதியின் தூய்மை தூதுவர்களாக நியமிக்கபடுவார்கள். எனவே குப்பைகளை ஒன்றாக கலக்காமல் 4 வகைகளாக பிரித்து வழங்கி ஊட்டி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

error: Content is protected !!