மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சீர்காழி வட்டத்திற்குட்பட்ட அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நெமிலி, புங்கனூர், அகரைப்பேட்டை, பொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்பங்கூர், கன்னியாகுடி, கதிராமங்கலம், நெடுங்காடு, வடபாதி, திட்டை, செல்லவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், எடமங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் இப்பகுதிகளுக்கு தாமதமாக வந்ததால், பல இடங்களில் விவசாயிகள் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைத்து சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்போது கடந்த சில வாரங்களாக சம்பா நெல் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் ஆடி 18-ஆம் தேதியை ஒட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தாமதமாகவே திறக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருசில இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், ஏராளமான விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களிலும், நெல் களங்களிலும் திறந்தவெளியில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்டன. குறிப்பாக, செம்மங்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்து சேதமடைந்தன.
மேலும், அறுவடை செய்யப்பட்ட வயல்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல்களும் மழையால் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, நனைந்து பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த நெல் மற்றும் வைக்கோலுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
