மஞ்சூர் கோடேரியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அங்கிருந்து பவானி எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அதிகரட்டி பிரிவு கோடேரி கிராமத்தில் குட்டியுடன் 6 காட்டு யானைகள் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்தது.
இந்த யானைகள் கோடேரி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மலை காய்கறி தோட்டங்களில் புகுந்து கிழங்கு செடிகளை வேறோடு பிடிங்கியும், தோட்டத்தை கால்களால் மிதித்தும், பயிர்களுக்கு நீர் பாய்ச்ச அமைக்கப் பட்டிருந்த ஸ்பிரிங்கிளர், ரப்பர் குழாய்களையும் நாசம் செய்தது. மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேரக்காய் பந்தல்களையும் பிரித்து காட்டு யானைகள் சூறையாடிது.
தோட்டத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வேலிகளையும் காட்டு யானைகள் உடைத்தெறிந்தது. இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வந்ததால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் யானைகளின் நடமாட்டம் உள்ள கோடேரி, சன்னிசைடு, குன்னக்கொம்பை, ஆலாடாவேலி, கிரேக்மோர் எஸ்டேட், சட்டன் எஸ்டேட், கிளிஞ்சாடா, கக்காச்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வரை கோடேரி பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் நேற்று காலை அங்கிருந்து குன்னுார் வனச்சரகத்திற்குட்டபட்ட பவானி எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது. இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
