சென்னை போதைபொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த ரவுடி பூபாலன் என்பவரை கைது செய்வதற்காக கடந்த 18ம்தேதி இரவு செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருப்பது உறுதியானதை தொடர்ந்து எஸ்ஐ வெங்கடேசன், காவலர் மதன்குமார் இருவரும் அத்திப்பட்டுக்கு சென்றனர். பூபாலனை எஸ்ஐ வெங்கடேசன் கைது செய்ய முற்பட்டபோது, அங்கு பதுங்கி இருந்த பூபாலனின் கூட்டாளி தர்ஷன், எஸ்ஐ வெங்கடேசன் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு 2 பெண் உட்பட 6 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை தொடர்ந்து காயமடைந்த எஸ்ஐ வெங்கடேசன் மீஞ்சூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தலையில் 3 தையல்கள் போடப்பட்டது.
இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவுபேரில், இணை ஆணையர் சிவக்குமார் மேற்பார்வையில் சென்னை போதை பொருள் தடுப்புப்பிரிவு எஸ்ஐ வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து துணை காவல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் ஆய் வாளர்கள் மீஞ்சூர் ஆறுமுகம், செங்குன்றம் கிருஷ்ணமூர்த்தி, சாத்தங்காடு முகமது அமீர், உதவி ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் கொண்ட 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே குற்றவாளிகள் இருவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது போலீசாரை பார்த்து இருவரும் தப்பி ஓட முயன்றனர். இதில், பைபர் தர்ஷன் கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பைபர் தர்ஷன், ஓசன்னா இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பைபர் தர்ஷனுக்கு வலது கையில் மாவு கட்டு போடப்பட்டது. பின்னர், காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், பூபாலனின் கூட்டாளியான தர்ஷன் அத்திப்பட்டில் நண்பருடன் இருந்தபோது உதவி ஆய்வாளர், தனது கூட்டாளியை கைது செய்ய முயன்றதால் வெட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் சரித்திர பதிவேடு குற்ற வாளியான தர்ஷன் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பைபர் தர்ஷன் (31), பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஓசன்னா (27) இருவர் மீதும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து, உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கிலும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வைத்தியநாதன் பாலத்தின் அருகே தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்ததில் இருவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 69 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ரவுடி பாலன் என்ற பூபாலன் (27), ரேஸர் கணேஷ் (29), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய் என்ற ராகுல் (26) என்பதும் தெரியவந்தது. 3 பேரும் அண்மையில் மீஞ்சூரில் காவல் உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கில் தொடர்புடையவர்கள். பூபாலன் போதை மாத்திரைகளை சர்வதேச கும்பலிடம் இருந்து வாங்கி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருவதும் பல வழக்குகள் பூபாலன் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. எலும்பு முறிவு ஏற்பட்ட பூபாலன், ரேஸர் கணேஷ் ஆகிய இருவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை காவல்நிலைய வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டனர். சரித்திரப்பதிவேடு குற்றவாளியை கைது செய்ய வந்த காவல் உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கில் குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கிய குற்றவாளியான பானு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
