தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் கடல் அலையில் சிக்கி 5 பேருக்கு கால் முறிவு ஏற்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடலில் இன்று அதிகாலை முதல் கடும் சீற்றம் ஏற்பட்டது. இதில், கடலில் புனித நீராடிய பக்தர்கள் 5 பேர் அடுத்தடுத்து ராட்சத அலையில் சிக்கி, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தனர்.
அதிகாலை 3:30 மணி: பண்ருட்டியைச் சேர்ந்த சரோஜா, காலை 6:45 மணி: காங்கேயத்தைச் சேர்ந்த குணசேகரன், காலை 7:00 மணி: திருச்சியைச் சேர்ந்த இளஞ்சியம், காலை 7:15 மணி: புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகுமாரி மற்றும் காலை 7:30 மணி: 75 வயதான மூதாட்டி கிருஷ்ணவேணி ஆகியோர் திடீரென வந்த பலத்த கடல் அலையில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு நிலைகுலைந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடலோரக் காவல் நிலைய காவலர் கார்த்திக் மற்றும் திருக்கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர், காயமடைந்த 5 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
