Skip to content
Home » விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அழித்து, தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தூர்வாரும் பணிகளின் போது முறைகேடாக மணல் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குட்டி சிவகாசி என்று அழைக்கப்படும் மேலணிக்குழி குடிகாடு கிராமமானது விவசாயம் நிறைந்த பூமியாகும். நிலக்கடலை, முருங்கை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டத்தின் கீழ், ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில், கருவாட்டு ஓடை எனப்படும் வடக்கு வேலி ஓடையில் 3 ஆயிரம் மீட்டர் வரை தூர் வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஓடையை ஒட்டி, ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை

அழித்துவிட்டு, தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்களுக்கு தற்போது அறுவடை செய்த பயிர்கள் மற்றும் விவசாய இடுப்பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடத்தில் 5 மீட்டர் பாதையை ஒதுக்கி, தூர்வார வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டும் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்
என ஒதுக்கீடு செய்து விட்டு, ரூபாய் 60 லட்சம் வரை ஓடையில் இருந்து முறைகேடாக மணல் லாரிகளில் ஏற்றி சென்று விற்பனை செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில்:- தூர்வாரும் பணிகளை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. விவசாயிகள் பாதிக்காத வண்ணம் ஏற்கனவே பயன்படுத்தி வந்த 5 மீட்டர் பாதையை ஒதுக்கி விட்டு பணிகளைத் தொடருங்கள் என்று தான் நாங்கள் சொல்கிறோம். அதே நேரத்தில் ஓடையில் முறைகேடாக மணலை எடுக்கக் கூடாது என்றும், எடுக்கப்பட்ட மணலை கரையில் கொட்டி பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம் ஆனால் ஆளுங்க கட்சியினர் மற்றும் அதிகாரிகள் காது கொடுத்து யாரும் கேட்கவில்லை. அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்டமாக விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் அதில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லும் மின் கம்பம் தோண்டப்பட்ட நிலையில் இருப்பதால் மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் அது மின்சார வாரியம் பார்த்துக் கொள்ளும் என அலட்சியமாக கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!