பீஜிங்: கடந்த சில நாள்களாக பெய்பு வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ‘நர்ரா’ புயல், சீனாவின் தெற்கு தீவான ஹைனான் மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை கரையை கடந்தது. இப்புயல் காரணமாக குவாங்ஸி, ஹைனான் மற்றும் குவாங்டாங் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையால் குவாங்ஸி பகுதியில் உள்ள ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சௌடல் புயலானது இன்று அல்லது நாளை சீனாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள செஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்புயல்களுடன் இணைந்து, கெனாரி மற்றும் அட்சானி என மொத்தம் 4 புயல்கள் வடமேற்கு பசிபிக் மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் மையம் கொண்டிருப்பதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தொடர் புயல்களின் அச்சுறுத்தல் காரணமாக குவாங்ஸி மற்றும் ஹைனான் மாகாணங்களில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
