Skip to content

திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….

  • by Authour

சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் பகுதியில், மேம்பாலமோ, சுரங்கபாலமோ இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை மட்டுமல்லாது, இந்த சாலையை, 15க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினம்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த, 15 ஆண்டுகளாக இந்த சாலைக்கு ஒரு உரிய தீர்வு ஏற்படவில்லை. இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கவனத்திற்கு, சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றனர்.

அதையடுத்து, திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் இன்று துரை வைகோ எம்பி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், தேசிய

நெடுஞ்சாலை துறை ஆணையம் திட்டஇயக்குனர் பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து, திருச்சி எம்பி துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொன்மலை ஜி கார்னர் சாலை பிரச்னை குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசினேன்.

அப்போது நிலம் வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தது. நிதியில் ஏதும் பிரச்னை வராது என்று நினைக்கிறேன்.

விரைவில் பொன்மலை ‘ஜி’ கார்னர் பகுதியில் மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாலமோ அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்வேன்.

இதற்காக, இரண்டு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அவர்களது துறை அமைச்சருக்கும் நான் ஒரு ஏவலாளன் போல பணிபுரிய தயாராக இருக்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுள்ளன.

என்னை பொறுத்தவரை உரிய விசாரணை இல்லாமல், ஆதாரம் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஒருவேளை அவர்கள் தவறான நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும்.

உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெறுவதால், நீதிமன்றம் வழங்குவதே இறுதித் தீர்ப்பு. நீதிமன்றத்திற்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் வழக்கை சிபிஐக்கு மாற்றுவார்கள். “வேங்கை வயலுக்கு தவெக தலைவர் விஜய் வருவதாக இருந்ததால், வழக்கு அவசர கதியில் முடிக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு, “ஜோக்கை ஜோக்காக வைத்து கொள்ளுங்கள். சீரியஸ் பிரச்னைகளை சீரியசாக வைத்துக் கொள்ளுங்கள்.

வேங்கை வயலுக்கு விஜய் வருவதாக இருந்தால் தான் இவ்வழக்கு வேக வேகமாக முடிக்கப்பட்டது என்பது முழுக்க முழுக்க தவறு. உரிய வீடியோ ஆடியோ ஆதாரங்கள் கிடைத்ததின் பேரில் தான் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். “சீமான் குறித்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் அளித்துள்ள பேட்டி குறித்து கேட்டதற்கு, “அண்ணன் சீமான் மேட்டருக்குள் நான் போக விரும்பவில்லை. நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பார்ப்போம்” என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

error: Content is protected !!