தலைநகர் டெல்லியில் போலியான ‘ENO’ மற்றும் ‘Nescafé’ காஃபி தயாரித்து விநியோகித்து வந்த ஒரு பெரிய மோசடி கும்பலை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லி மதுவிஹார் பகுதியில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, போலி ENO பவுடர் மற்றும் போலி நெஸ்கஃபே காஃபி ஆகியவை தயாரிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டு வந்த இரண்டு சட்டவிரோத மையங்களை கண்டறிந்தனர். இந்தச் சோதனையின்போது, சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தவிர அதிரடி சோதனையின் முடிவில் காவல்துறை குழுவினர் மூன்று பேக்கிங் மெஷின்கள், சுமார் ஒரு லட்சம் ரெடி ENO பாக்கெட்டுகள், ஏறத்தாழ 50,000 போலி காஃபி பாக்கெட்டுகள், சுமார் 500 கிலோ காஃபி தூள், ஆசிட் நிரப்பப்பட்ட பேரல்கள் போன்றவற்றுடன்; பிலி பொருட்கள் தயாரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பேக்கேஜிங் ரோல்ஸ், ஸ்டிக்கர்ஸ் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றினர்.
சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களும் கைது செய்யப்பட்டவர்களும் பொது சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட போலி பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், பிராண்டட் பொருட்களைப் போலவே தோற்றமளிக்கும் பொருட்களைத் தயாரிக்க தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய மூலப்பொருட்களைப் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் முறையானது நுகர்வோர் உண்மையான மற்றும் போலியான பொருட்களை வேறுபடுத்தி அறிவதை கடினமாக்கியுள்ளது என்றனர். இது போன்ற சம்பவங்கள் உணவுப் பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகளை மேலும் அதிகரிக்க செய்கிறது.
டெல்லி சைபர் செல் மற்றும் தெற்கு சரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு குடியிருப்புகள் சட்டவிரோத உற்பத்தி அலகுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை கண்டறிந்தனர். இந்த 2 இடங்களுமே போலிப் பொருட்களைத் தயாரித்தல், பேக்கேஜ் மற்றும் விநியோகிப்பதில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளன என்பதையும் காவல்துறை கண்டறிந்ததாக அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
