தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் கடந்த சில நாட்களாக அதிகளவில் போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக சென்னை விமானநிலையத்தில் இரவுபகலாக விமானநிலைய சுங்கத்துறையின் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் ரூ.14.5 கோடி உயர்ரக கஞ்சா கடத்தி வந்த வடமாநில பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அன்றிரவு தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.1.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்த 2 கடத்தல் குருவிகளை கைது செய்து விசாரிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் நேற்றிரவு சுங்கத்துறையின் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்து நாட்டிலிருந்து ஒரு தனியார் பயணிகள் விமானம் சென்னை வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அதே விமானத்தில், மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு, மீண்டும் அங்கு திரும்பாமல் சென்னையில் வந்திறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்களின்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் விமானநிலைய சுங்க சோதனைகளை முடித்துவிட்டு, கன்வேயர் பெல்ட்டில் இருந்து தங்களின் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு, தங்களிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவுமில்லை என்று கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். அந்த 2 பெண் பயணிகளையும் சுங்கத்துறையின் தனிப்படையினர் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ்களை ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். சூட்கேசுக்குள் இருந்த 7 பார்சல்களில் ரூ.6 கோடி மதிப்பிலான 6 கிலோ ஹைட்ரோபோனிக் எனும் உயர்ரக கஞ்சா கடத்தி வந்திருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, 2 பெண்களையும் கைது செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் சர்வதேச போதைபொருள் கடத்தும் கும்பலில் கடத்தல் குருவிகளாக செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
