Skip to content
Home » பஸ்சில் தவறவிடப்பட்ட நகை….உரியவர்களிடம் ஒப்படைக்க “திருச்சி போலீஸ் பிகு”

பஸ்சில் தவறவிடப்பட்ட நகை….உரியவர்களிடம் ஒப்படைக்க “திருச்சி போலீஸ் பிகு”

சென்னை மாதவரத்தில் இருந்து கடந்த 4ம் தேதி திருச்சிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் மாதவரத்தில் 3  பெண் பயணிகள் ஏறினர். அவர்கள்  பெரம்பலூரில்  இறங்கிவிட்டனர்.   அதிகாலையில் பஸ் திருச்சி வந்ததும் , அனைத்து பயணிகளும் இறங்கினர். பின்னர் டிரைவர்  எஸ். ரமேஷ்,  கண்டக்டர்  ஆர். கோபாலன் ஆகியோர் பஸ்சை  திருச்சி கண்டோன்மெண்ட்  புறநகர்  பஸ் டெப்போவுக்கு வந்து  பஸ்சை  நிறுத்தினர்.

பஸ்சை டெப்போவில் ஒப்படைக்கும்போது பஸ்சில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா, பயணிகள் எதையாவது தவறவிட்டு சென்று இருக்கிறார்களா என ஆய்வு செய்து ஒப்படைக்க வேண்டும். அதன்படி  டிரைவரும், கண்டக்டரும் ஆய்வு செய்தபோது பஸ்சில்  ஒரு துணிப்பை கிடந்தது.  அந்த பைக்குள் பார்த்தபோது  தங்க நெக்லஸ், ஆரம், தோடு என  மொத்தம் 10 பவுன் நகைகள் இருந்தது. இந்த நகைகளின் தற்போதைய மாா்க்கெட் மதிப்புரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

பெரம்பலூரில்  3 பேர் இறங்கினார்கள்  அல்லவா? அவர்கள் இருந்த இடத்தில் தான் இந்த பை கிடந்தது. எனவே அவர்கள் தவற விட்டிருக்கலாம் என கருதி போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கும்,  காவல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.  உடனடியாக நகைகளை திருச்சி கண்டோன்மெண்ட்  போலீசில் ஒப்படைக்க  போக்குவரத்து கழக அதிகாரிகள், டிரைவர், கண்டக்டர் கொண்டு சென்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார்  இந்த நகைகளை நாங்கள் வாங்க முடியாது. உயர் அதிகாரிகள் வரவேண்டும். அதுவரை  இங்கேயே இருங்கள். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றனர்.

இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் நகைகளுடன் டெப்போவுக்கு திரும்பி வந்து விட்டனர்.  இதற்கிடையே நகைகளை தவறவிட்ட பயணிகள்  திருச்சி அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு தகவல் தெரிவித்தனர்.  அப்போது அவர்களிடம்  நகைகள் இங்கு தான் இருக்கிறது. வந்து பெற்றுச்செல்லுங்கள் என தகவல் தெரிவித்தனர்.

அவர்களை திருச்சி கண்டோன்மெண்ட் பணிமனைக்கு வரவழைத்து அவர்களிடம் நேற்று மாலை  நகைகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  நகைகளை பெற்றுக்கொண்ட  பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!