Skip to content
Home » இன்று சட்டமன்றம் துவக்கம்… உரையை முழுவதுமாக வாசிப்பாரா கவர்னர்…?

இன்று சட்டமன்றம் துவக்கம்… உரையை முழுவதுமாக வாசிப்பாரா கவர்னர்…?

  • by Senthil

இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று  காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. ஏற்கனவே, கூட்டதொடரில் உரை நிகழ்த்த வருமாறு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, காலை 9.57 மணிக்கு தலைமைச்செயலகத்திற்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

பின்னர் காவல்துறையினரின் மரியாதை ஆளுநருக்கு அளிக்கப்பட்டு பேரவைக்கு சிவப்பு கம்பள மரியாதையுடன் அழைத்து செல்லப்படுவார். இதன் பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். பின்னர், இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை நிகழ்த்துவார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசிப்பார். இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு, ஆளுநருக்கு அளிக்கப்படும் மரபுபடி அவரை வழியனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கப்படும். அதனை தொடர்ந்து, பேரவை தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என தீர்மானிக்கப்படும். அதன்பின் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடத்தப்பட உள்ளது. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு காரசாரமான விவாதங்களும், கருத்து மோதல்களும் இக்கூட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, வரும் 19ம் தேதி 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். மறுநாள் (20ம் தேதி) வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். இன்றைய ஆளுநரின் உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்தாண்டு நடந்த ஆளுநர் உரையின்போது அரசு தயாரித்த உரையை தவிர்த்து சில பத்திகளை வாசிக்காமல், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதனால், பேரவையில் இருந்த உறுப்பினர்கள் ஆளுநரின் இந்த செயலை கடுமையாக சாடினர். உடனடியாக ஆளுநர் தானாக சேர்த்து படித்த பகுதி அவை குறிப்பில் இடம் பெற கூடாது என்றும், அரசின் சார்பில் தயாரித்து சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றும் அரசு வழங்கிய உரையை ஆளுநர் வாசிப்பாரா? அல்லது கடந்த முறை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!