Skip to content
Home » திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

  • by Senthil

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா    நேற்று முன்தினம்  நடந்தது.   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்  விழாவுக்கு தலைமை தாங்கினார்.  வாழவந்தான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பேபி, திருவெறும்பூர் தாசில்தார் சிவ பிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, அழகுமணி, அனைத்து வகை பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் அன்பு சேகரன் திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர் ரெஜி பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கலெக்டர்  பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில்  கலெக்டருக்கு வலதுபுறம் முதன்மை கல்வி அதிகாரி  சிவக்குமார், அதற்கு அடுத்ததாக  ஊராட்சி தலைவி  சின்னம்மாள் ஆகியோர் நாற்காலியில் அமர்ந்து இருந்தனர்.

கலெக்டரின் இடதுபுறம்  போடப்பட்டிருந்த நாற்காலியில்  ஊராட்சி தலைவர் சின்னம்மாளின் கணவர் தேவராஜ்  வந்து அமர்ந்து கொண்டார். விழா முடியும் வரை அவர் அந்த நாற்காலியை விட்டு நகரவில்லை.  அதே நேரத்தில்  தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் நின்று கொண்டே இருந்தனர்.  எந்த பதவியும் இல்லாத ஒருவர் அரசு விழாவில்  மேடையில் கலெக்டர் அருகே வந்து அமர்ந்து கொண்டது அதிகாரிகளையும், அங்கிருந்த ஆசிரியர்களையும், பொதுமக்களையும் எரிச்சலடைய செய்தது.

பெண் ஊராட்சி தலைவர்கள், பெண் கவுன்சிலர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள்  தங்களின்  கணவர் மற்றும் குடும்பத்தினர் தலையீடுகளை தவிர்க்க வேண்டும் என பலமுறை  தமிழக முதல்வர் எச்சரித்தும்  பெண் ஊராட்சி தலைவர்களின்  கணவர்கள்  தொடர்ந்து நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அத்துடன் இந்த தேவராஜ்,  ஒன்றிய கவுன்சில் கூட்டத்திலும், தனது மனைவிக்கு பதிலாக கலந்து கொண்டு பேசுவார் என்றும்  அந்த பகுதி மக்கள்  சரமாரி புகார்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!