நடந்தை வடபாக்கம் கிராமத்தில் முறையாக நடைபெறாத சிறப்பு கிராம சபைக் கூட்டம்? – புதிய கல்குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு மூதாட்டி பேசும் வீடியோ வைலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், நடந்தை வடபாக்கம் கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிராம மக்களுக்கு முறையான அழைப்பு விடுக்காமல், அதிகாரிகள் சிலர் மட்டுமே பங்கேற்று, நான்கு பொதுமக்களை அமர வைத்து கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், வடபாக்கம் பகுதியில் புதிதாக அமைய உள்ள கல்குவாரிக்கு எதிராக கடந்த கிராம சபைக் கூட்டத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அப்போது தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் தற்போது நடைபெறும் கூட்டத்திலாவது கல்குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை,
இதற்கிடையே, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட வேண்டிய பதிவேட்டையும் அங்கேயே விட்டுச் சென்றனர் பின்னர் பல மணி நேரம் கழித்து அந்த பதிவேட்டை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற மூதாட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், செய்யாத பல்வேறு பணிகளுக்கு பணம் எடுத்து வருவதாகவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குவாரியால் குடிநீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும், புதிய கல்குவாரி அமைக்கக் கூடாது எனப் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதாகவும், கிராம மக்களுக்கே அழைப்பு விடுக்காமல் தன்னிச்சையாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூதாட்டி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
