கரூர்:01.11.2026
கரூர் ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடியில் திடீர் கட்டண உயர்வு – சுங்கச்சாவடியில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்ட ஓட்டுநர்-பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.
கரூர் மாவட்டம், வேலம்பாடி ஊராட்சியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை சுங்கச்சாவடியை நிர்வகித்து வந்த நிறுவனம் மாறி, புதிய நிறுவனம் டெண்டர் எடுத்துள்ள நிலையில், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்குமான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தனியார் பேருந்துகளுக்கான மாதாந்திர சுங்கக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் பேருந்து உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுங்கச்சாவடி வழியாக திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, திடீர் கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடியிலேயே பேருந்தை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், வரும் 4ஆம் தேதி பேருந்து சங்கத்தினர், வட்டாட்சியர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் வாகன உரிமையாளர்கள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிக் குழுக் கூட்டம் நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதுவரை சுங்கச்சாவடியைத் தொடர்ந்து திறந்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, தனியார் பேருந்துகள் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றன.
திடீர் சுங்கக் கட்டண உயர்வால் தனியார் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
குறிப்பாக பேருந்து மல்டிபிள் சிங்கிளுக்கு ஒரு நாளைக்கு ரூ.410 வீதம் மாதத்திற்கு ரூ.12,310 கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது 50 சிங்கிளுக்கு ரூ.15,905 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு பஸ் மாதத்திற்கு குறைந்தது 150 சிங்கிள் ஓடுகிறது. அதற்கு ரூ.59 ஆயிரம் வருகிறது. டவுன் பஸ் 450 சிங்கிள் ஓடுகிறது. அதற்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கட்ட வருகிறது.
அதே போல உள்ளூர் கார்களுக்கு மாதம் ரூ.150 அன்லிமிடெட் என்று இருந்தது. இப்போது ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது..
வணிக வாகனம், டாடா ஏஸ் போன்ற வாகனங்களுக்கு ஒரு சிங்கிளுக்கு ரூ.15 ஆக இருந்தது தற்போது ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
