கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன், கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளும் வழங்குவார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பெருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,செங்கை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் நீதிநாதன், சிஎஸ்ஐ பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன், சூரியனார்கோவில் சிவகர யோகிகள் மடத்தின் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், லயோலா கல்லூரி அதிபர் பிரான்சிஸ் சேவியர், தென்னிந்திய திருச்சபை பொதுச்செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ்,பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்ற துணை பிரதம பேராயர் டேவிட் பிரகாசம், சேலம் ஆத்தார் இஸ்லாமிய கலைக்கூடம் அகமது இம்ரானுல்லாஹ் பாகவி, லிபா இயக்குனர் அருண், மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், அடைக்கல அன்னை சபையின் தலைமை சகோதரி மரிய பிலோமினா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, திமுக சட்ட ஆலோசகர் வில்சன் எம்.பி,எழிலன் எம்.எல்.ஏ, மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.முன்னதாக திருச்சி கலைக்காவேரி மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெறுகிறது. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க பொதுச்செயலாளர் பால் தயாநிதி ஜெப வழிபாடு நடத்துகிறார். முன்னதாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல். ஏ.வரவேற்கிறார். முடிவில் அந்தோணி நன்றி கூறுகிறார்.