Skip to content
Home » அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

அரியானாவில் கலவரம்…. சரமாரி துப்பாக்கிச்சூடு… 3 பேர் பலி

  • by Senthil

அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவை சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே பயங்கர வன்முறை வெடித்தது. இரு தரப்பும் கற்களை வீசி தாக்கினர். இதில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் இருந்து தப்புவதற்காக ஏராளமானோர் அருகில் உள்ள கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். மறுபுறம் வன்முறையாளர்கள் போலீசாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். அத்துடன் துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.

இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 12 போலீசார் காயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர்.  இந்த வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வதந்தி பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தில் நாளை வரை இணையதள முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நூ மாவட்டத்தில் வன்முறை அரங்கேறிய தகவல் அறிந்ததும் அண்டை மாவட்டமான குருகிராமின் சோனாவில் வன்முறை பரவியது. அங்கும் 4 வாகனங்கள் மற்றும் ஒரு கடை தீக்கிரையாக்கப்பட்டன.  இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து நூ மாவட்டத்துக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மாநில உள்துறை மந்தரி அனில் விஜ் கூறியுள்ளார். அனைவரும் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கலவரத்தால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!