Skip to content
Home » சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

  • by Senthil

சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள்,
சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர். J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன
பொறுப்பாளர்/ தலைமைக் காவலர்  ஆர். தயாளன், (த.கா.32390) என்பவர் கடந்த 5.12.2023 அன்று துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், OMR சாலை, VPG அவென்யூ பகுதியில் உள்ள 13 தெருக்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்த
பொதுமக்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில்
விட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு மழைநீர் சூழ்ந்த பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பை மற்றும் கைக்குழந்தையுடன் வெளியேற
முடியாமல் தவித்த கணவன், மனைவியை கண்டு தலைமைக் காவலர் தயாளன் அருகில் சென்று அவர்களிடமிருந்து குழந்தையையும், அவர்களது பையையும் வாங்கி சுமந்து கொண்டு பத்திரமாக அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில்
கொண்டு சேர்த்தார்.

கிடா மீசையுடன் ஆஜானுபாகுவான  தோற்றம் கொண்ட ஏட்டு தயாளன்,   அந்த ஒரு வயது குழந்தையை தனது மார்போடு சேர்த்து அணைத்து  தண்ணீரில் 3 அடி உயரத்திற்கு பாய்ந்தோடும் வெள்ளத்தில்  மீண்டு வந்த காட்சி  சமூகவலைத்தளங்களில் பரவியது.  வழக்கமாக தொடர் பணிகளில் இருக்கும் போலீசார் களைப்புடன், சோர்வுடன் காணப்படுவார்கள். ஆனால் தயாளன் அந்த

குழந்தையை மார்போடு அள்ளி அணைத்து மீட்டு வந்தபோது அவரது  கம்பீரமான  தோற்றம் குழந்தையிடம் தோற்றுப்போய்,  தயாளனும்  உள்ளத்தால் ஒரு குழந்தையாகவே போய்விட்டார். அவருக்கு அத்தனை மகிழ்ச்சி,  பெருமிதம்.

இதுவரை நான் எத்தனையோ பணிகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பணியும் எங்கள் கடமை தான்.  தொடர்ந்து 4 நாட்கள் பணியில் இருந்தபோதும், குழந்தையை மீட்டு வந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும், சந்தோசமும் , உற்சாகமும் தான் ஏற்பட்டது  என்றார்.  இதுவும் சமூக வலைதளங்களில்   பாராட்டுதல்களை அள்ளியது.  போலீஸ் உங்கள் நண்பன் என்பதை தயாளன் நிரூபித்து விட்டார் என்ற   பாராட்டுதல்கள்  , லைக்குள் குவிந்தது. இந்த நிலையில் சென்னை பெருநகர  போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், மிக்ஜம் புயல் மீட்பு பணியில் சிறப்பாக மீட்பு பணி மேற்கொண்ட தலைமைக் காவலர் (த.கா.32390) ஆர். தயாளனை, இன்றுநேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!