Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூய்மையான கோவில் பிரசாதம்-அரசே தயாரிக்கும்-அமைச்சர் ரமேஷ்

Tamil Nadu Minister Ramesh addressing a press conference in Chennai on June 12 2026 announcing state-made temple prasadam sales in 3 months.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் செயல்படும் பிரசாதக் கடைகள் மீது நீண்ட காலமாக தரக்குறைவு, விலை உயர்வு உள்ளிட்ட புகார்கள் எழுந்து வந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இனி கோவில் வளாகத்திற்குள் தான் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெளிவான கெடு விதித்துள்ளார். மேலும், வடை, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்காணிக்க தனி குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு கூடுதல் ஆணையர் தலைமை தாங்குவார். இதன் மூலம் பிரசாதங்களின் தரம் உயர்த்தப்படுவதோடு, பக்தர்களுக்கு தரமான உணவு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்களின் வசதியை மேலும் அதிகரிக்கும் வகையில் இணையவழி சேவைகளும் வலுப்படுத்தப்படுகின்றன. கோவில் இணையதளங்களை முழுமையாக மேம்படுத்தி, யாத்ரி நிவாஸ் மற்றும் பிற தங்கும் விடுதிகளில் அறைகளை ஆன்லைனில் எளிதாக முன்பதிவு செய்யும் வசதி உருவாக்கப்படும். மேலும், ஒரே தளத்தில் (Single Platform) ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு, அறை முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தரிசன வசதி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். கோவில்களில் திடீர் கூட்ட நெரிசலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் கழிவறைகளை தினசரி தூய்மைப்படுத்துதல், அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர்கள் கீழ் உள்ள கோவில்களில் தங்கும் வசதிகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகளை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தேரோட்டம், கும்பாபிஷேகம், தெப்பத் திருவிழா போன்ற நிகழ்வுகளின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். தேரின் சக்கரங்களுக்கு அருகில் பக்தர்கள் செல்லாமல் தடுக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) கட்டாயம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெண்டர் மற்றும் ஏல நடைமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழைய முறையில் நடைபெற்ற ஏலங்களை ரத்து செய்து புதிய வழிகாட்டுதல்களின்படி மறு ஏலம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சிறு கோவில்களில் ஒரு கால பூஜையை முக்கால பூஜையாக மாற்ற சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, சாத்தியமான கோவில்களில் உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் தமிழக கோவில்களை மேலும் சிறப்பானதாகவும், பக்தர்களுக்கு வசதியானதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் ரமேஷின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பக்தர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

error: Content is protected !!