Skip to content
Home » மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் செல்லும்.

சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் குதித்தன. இந்திய அணியில் பயிற்சியின் போது ஸ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் பிடிப்பு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள லோகேஷ் ராகுல் கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.எனவே இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். லீக் சுற்றில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு தாக்குதலில் நிலைகுலைந்ததால் இந்த தடவை இருவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் ஆடினர். அபாயகரமான பவுலர் என்று வர்ணிக்கப்படும் ஷகீன் ஷா அப்ரிடியின் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா சிக்சர் அடித்தார். அவரது அடுத்தடுத்த ஓவர்களில் சுப்மன் கில் தலா 3 பவுண்டரி விரட்டியடித்து அமர்க்களப்படுத்தினார்.

அப்ரிடி தனது 3 ஓவரிலேயே 31 ரன்களை வாரி வழங்கினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. சுப்மன் கில் 37 பந்தில் தனது 8-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கானின் ஒரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோகித் சர்மாவும் அரைசதத்தை கடந்தார்.

அணியின் ஸ்கோர் 121-ஐ எட்டிய போது ரோகித் சர்மா (56 ரன், 49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஷதப்கானின் பந்துவீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் சுப்மன் கில்லும் (58 ரன், 52 பந்து, 10 பவுண்டரி) வெளியேறினார். அவர் அப்ரிடி வீசிய பந்தை அடித்த போது ‘கவர்’ திசையில் நின்ற ஆஹா சல்மானிடம் சிக்கினார்.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 8 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஒன்றரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு மைதானத்தை உலரவைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் இரவில் மறுபடியும் மழை பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு தொடர இயலாது என்று நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (ரிசர்வ்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன்படி பாதியில் நின்று போன இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று (திங்கட்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு விட்டஇடத்தில் இருந்து( 2 விக்கெட் இழப்புக்கு 24.1 ஓவர்) ஆட்டம் தொடங்கும். ராகுல், கோலி தொடர்ந்து பேட் செய்வார்கள்.

ஆனால் இன்றைய தினமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 24.1 ஓவர் பேட்டிங் செய்த நிலையில் மழையால் தடைபட்டது. அந்த ஆட்டம் மாற்று நாளான இன்று தொடர்ந்து நடக்க இருக்கிறது. சூப்பர்4 சுற்றில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடப்பு சாம்பியன் இலங்கையை சந்திக்கிறது. ஆக ஓய்வின்றி இந்திய வீரர்கள் தொடர்ந்து 3 நாள் விளையாட உள்ளனர். மழை நின்ற பிறகு மைதானத்தில் ஈரத்தை உலர்த்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அவுட் பீல்டு தான் மோசமாக இருந்தது. குறிப்பாக ஆடுகளத்தின் அருகே இரண்டு இடங்களில் அதிக ஈரம் காணப்பட்டது. அந்த இடத்தை காற்றால் காய வைப்பதற்காக அதன் அருகே மின்விசிறியை பொருத்தி ஓடவிட்டனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!