வெளிநாட்டு உத்தரவுகளுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியது.
பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இத்தகைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு இடையிலும், இந்தியா தனது நீண்டகால நட்பு வியூகத்தின் அடிப்படையில் ரஷ்யாவுடனான வர்த்தக உறவைத் தொடர்ந்து உறுதியாக முன்னெடுத்து வந்தது. இந்நிலையில், புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஒருபோதும் வெளிநாட்டு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டது கிடையாது;
ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாட்சியான முடிவெடுக்கும் திறனை யாராலும் கேள்வி கேட்க முடியாது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது. அமெரிக்கர்கள் மிகவும் நடைமுறைவாதிகள்; அவர்களுக்கு லாபம் கிடைக்கும் இடங்களில் மட்டும் யுரேனியம் ஏற்றுமதி போன்ற ஒத்துழைப்பைத் தொடர்கின்றனர்; இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் சுதந்திரமானது’ என்றார்.
