பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நேபாளத்தில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தற்போது சிக்கி கொண்டிருக்கும் இந்தியர்கள் அடங்கிய ஐந்து முக்கிய குழுக்கள் குறித்து பேசினார்.
திரிசூலி-1 மின் திட்டத்தில் பணியாற்றும் 73 பேர் கொண்ட ஒரு குழுவினர்; அடுத்து, ‘சம்ராட்’ மற்றும் ‘ஃப்ளை எவரெஸ்ட் டிராவல்ஸ்’ மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 37 மற்றும் 49 பேர் கொண்ட இரண்டு தனித்தனி குழுக்கள்; ரசுவா மாவட்டத்தில் உள்ள டிமுரே (Timure) பகுதியில் ‘சம்ராட் டிராவல்ஸ்’ உதவியுடன் சென்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 இந்தியர்கள் அடங்கிய குழு; பின்னர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 61 இந்தியர்கள் கொண்ட குழு; மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் கொண்ட குழு என மொத்தம் சுமார் 288 பேரை நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.
தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மானசரோவர் யாத்திரை சென்ற பல இந்தியர்கள் சீனப் பகுதியில் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள சுமார் 200 இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற உதவியை கேட்டு உள்ளனர். அவர்களில் 95 பேர் Garchan என்ற பகுதியில் உள்ளனர்; அவர்கள் நேபாளத்திற்குள் நுழைவதற்காக தற்போது பில்சா என்ற பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொடர்பு கொள்ள முடியாதவர்கள் குறித்த கூடுதல் விவரங்களைச் சேகரிக்க காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அந்தத் திட்டத்தின் பொறுப்பாளருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.
மேலும் நான்கு பேர் ஜீலாங் நகரிலும், 13 பேர் சுதுல்போ குதியிலும் உள்ளனர்; அவர்கள் சாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்… தற்போதைய சூழல் தொடர்ந்து மாறி கொண்டே இருக்கிறது, என்று தெரிவித்தார். அதே போல அவசர மற்றும் மனிதாபிமான நிவாரண உதவிகளுடன் இரண்டு விமானங்கள் காத்மாண்டுவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா மொத்தம் 47.5 டன் அவசரக்காலப் பொருட்களை அனுப்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
