Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை காப்பீடு – அமைச்சர் அருண்ராஜ்

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நோயாளிக்கு ரூ.22 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உயிருடன் இருப்பவர்களிடமிருந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்று, தற்போது முழுமையாக மீண்டு வந்துள்ள 250-க்கும் மேற்பட்ட நபர்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் விழா சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள
கிளன் ஈகிள்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்,

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 250-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதுடன், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைகள் மற்றும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயிருடன் இருக்கும் உறவினர்களிடமிருந்து கல்லீரல் தானம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைத் தானமாகப் பெறுவது மற்றும் உயிருடன் இருப்பவர்கள் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்குவது என இரண்டு வகையான உறுப்பு தான முறைகள் உள்ளன. உயிருடன் இருப்பவர்கள் உறுப்பு தானம் செய்யும்போது அவர்களது உடல்நலத்தையும் பாதுகாப்பது அவசியம் என்றார்.

கடந்த ஆண்டு மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் மூலம் அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு முதலிடம் பெற்றதாகவும், இதற்காக டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

உறுப்பு தானத்தில் முன்னோடியாக விளங்கும் ஸ்பெயினில் 10 லட்சம் பேருக்கு 52 பேர் என்ற விகிதத்தில் உறுப்பு தானம் நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை நான்காக மட்டுமே உள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதனை 10 ஆக உயர்த்தத் தமிழ்நாடு மருத்துவத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு விடுப்பு வழங்குவது, கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்கியவர்களுக்கு எதிர்காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட புதிய கொள்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைப் பாதுகாத்து, உரிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லவும், உறுப்பு தான நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும் பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கல்லீரல் பாதிப்புக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக மதுப்பழக்கம் இருப்பதால், அதற்கு அடிமையானவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று அதிலிருந்து மீள வேண்டும் என்றார்.

இளைஞர்கள் மத்தியில் மது அருந்துவதும், புகைபிடிப்பதும் அந்தஸ்தின் அடையாளம் என்ற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். மது அருந்தாமலும், புகைபிடிக்காமலும் இருப்பதே உண்மையான கெத்து என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றால் கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனைத் தடுக்கும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை முறையாகச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!