Skip to content
Home » ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. A

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை. இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 57-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சை சந்திக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியை பொறுத்தமட்டில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக விளங்குகிறது. அந்த அணி குறிப்பிட்ட ஒரு வீரரை நம்பி இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் பொறுப்பேற்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்வது கூடுதல் பலமாகும்.

அந்த அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் (469 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான் சஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் முகமது ஷமி, ரஷித் கான் (இருவரும் தலா 19 விக்கெட்), மொகித் ஷர்மா, நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்பும் வலுசேர்க்கிறார்கள்.

தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோ அணிகளை அடுத்தடுத்து பந்தாடிய உற்சாகத்துடன் இருக்கும் குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையும். இதனால் முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க அந்த அணி அதிக ஆர்வம் காட்டும். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ரன்-ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு சிரமமின்றி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும்.

முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக 200 ரன் இலக்கை 21 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்திய மும்பை அணி இந்த சீசனில் ரன் இலக்கை விரட்டுகையில் 4 முறை 200 ரன்களை கடந்து வியக்க வைத்து இருக்கிறது. அந்த அணி குஜராத்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் வரிந்து கட்டும். மும்பை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், அந்த அணியில் பவுலிங் பிரமாதம் என்று சொல்ல முடியாது. பந்து வீச்சில் பியுஷ் சாவ்லா (17 விக்கெட்), பெரன்டோர்ப் (11 விக்கெட்) தவிர வேறுயாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பேட்டிங்கில் சூர்யகுமார் (376 ரன்கள்), இஷான் கிஷன் (335 ரன்கள்), கேமருன் கிரீன், காயம் அடைந்த திலக் வர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்றுள்ள நேஹல் வதேரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா மட்டும் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். 11 ஆட்டங்களில் 191 ரன்கள் எடுத்து இருக்கும் அவர் கடைசி 5 ஆட்டங்களில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்து இருக்கிறார். இதில் 3 டக்-அவுட்டும் அடங்கும். அவரது பேட்டில் இருந்து அதிரடியாக ரன்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கும், விறுவிறுப்புக்கும் குறைவு இருக்காது. ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை, குஜராத் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!