Skip to content
Home » காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா வந்தது. அப்போது முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான ஆயுத மோதல் தீவிரமானது.

இந்த சூழலில்தான் கடந்த மாதம் 7-ந் தேதி முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். சுமார் 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசிய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.

ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய செய்த இந்த தாக்குதலால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் அரசு ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதாக சூளுரைத்தது. அதற்காக கடந்த 1½ மாதங்களுக்கும் மேலாக காசாவை சுற்றிவளைத்து தரை, கடல், வான் என 3 வழிகளிலும் சரமாரியாக தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.இதில் காசா நகரம் சின்னபின்னமாகி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படும் சோகம் தொடர்கிறது.

கடந்த 48 நாட்களாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர். இந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனிடையே, காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. காசாவின் அல் ஷிபா மருத்துவமனையின் பரந்து விரிந்த அடிப்பரப்பில் சுரங்கம், பதுங்கு குழிகளில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டு மையத்தை அமைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையின் அடிப்பகுதியில் ஹமாஸ் நிறுவியிருந்த சுரங்கம் குறித்த வீடியோ காட்சிகளை இஸ்ரேல் நேற்று வெளியிட்டது.

இந்த வீடியோ காட்சிகள் வெளிநாட்டு செய்தியாளர்கள் வசமும் வழங்கப்பட்டது. அந்த வீடியோவில் கற்களைக் கொண்டு 150 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் முடிவில் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் குளிர்சாதன வசதி, சமயலறை, குளியலறை, ஸ்டீல் கட்டில் ஆகியவை உள்ளன. மருத்துவமனையை பயங்கரவாத தாக்குதல் திட்டத்துக்கான கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தி வருவதை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!