Skip to content
Home » ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோா்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனு ஏற்கப்பட்டு, சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

அவர்கள் அனைவரும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி ஒரு கடிதம் வழங்கினார். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் வழக்கறிஞர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி எழுதிய கடிதத்திற்கு கர்நாடகா அரசு பதில் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!