Skip to content
Home » ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா, 2-வது மிக மூத்த நீதிபதி ஆவார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். குஜராத்தில் பிறந்த அவர், அங்குள்ள ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். 2005-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆனார். அதே ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார்.

நேற்று அவரது கடைசி பணிநாள் என்பதால், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு, பிரிவு உபசார உரைக்கான அமர்வாக செயல்பட்டது. அட்வகேட் ஜெனரல் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, நீதிபதி எம்.ஆர்.ஷா பேசியதாவது: நான் ஓய்வு பெறப்போகும் ஆள் அல்ல. எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறேன். அதற்கான வலிமையை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.  ராஜ்கபூர் நடித்த ‘மேரா நாம் ஜோக்கர்’ இந்திப்படத்தில் வரும் ‘கல் கேல் மே ஹம் ஹோ நா ஹோ’ என்ற பாடலை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன். (இதை கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார். அதனால், வீடியோ ஒளிப்பதிவு நிறுத்தப்பட்டது).  என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டீர்கள். முழு ஆதரவு அளித்தீர்கள். தலைமை நீதிபதி என்னை ஒரு சகோதரன் போல் ஊக்கப்படுத்தினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

எனது பணிக்காலத்தில் வேலைக்கும், மனுதரர்களுக்கும் நியாயம் செய்திருப்பதாக கருதுகிறேன். நான் யாரையாவது காயப்படுத்தி இருந்தால், அதற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: நீதிபதி எம்.ஆர்.ஷாவுடன் எனக்கு நீண்டகால பழக்கம் உள்ளது. அவர் உண்மையான நண்பர், கொலீஜியத்தில் நல்ல கூட்டாளி. எந்த பணியையும் நிலுவையில் வைக்க மாட்டார். பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார். நிறைய ரகசிய கதைகளும் இருக்கின்றன. அதை மாலையில் பேசுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசும்போது, நான் அறிந்த நீதிபதிகளில் மிகவும் துணிச்சலானவர் என்று நீதிபதி ஷாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!